தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் சில தாழ்நில பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கை நாளை திங்கட்கிழமை (20) காலை 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழைவீழ்ச்சியின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வினாடிக்கு 22,400 கன அடி உயர்ந்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தெதுரு ஓயாவின் நீரியல் நிலையங்களின் ஆற்று நீர் மட்டங்களை ஆய்வு செய்யப்பட்டன.
அந்த ஆய்வுக் குறிப்பின் அடிப்படையில், வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, மேற்படி பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாக பயணிக்கும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இது தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.