கிறிஸ்துவ இந்திய வாரிசுரிமை சட்டப்படி, திருமணமான மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த பவுலின் இருதய மேரியின் மகன் மோசஸ். இவரை கற்பக தேவி என்ற அக்னஸ் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2012-ல் மோசஸ் இறந்து விட்ட நிலையில், மோசஸின் சொத்தில் பங்கு கேட்டு அவரது தாயார் பவுலின் இருதய மேரி, நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்னஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.முனுசாமி ஆஜராகி, ‘‘இந்தியாவில் பின்பற்றப்படும் கிறிஸ்துவ வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 33 மற்றும் 33-ஏ பிரகாரம் திருமணமான மகன் இறந்து விட்டால் அந்த சொத்தில் மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமே பங்கு தரப்பட்டுள்ளது. தாயாருக்கு அந்த சொத்தில் எந்த உரிமையும் கிடையாது. ஆனால், இதை கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது’’ என வாதிட்டார்.
பவுலின் இருதய மேரி சார்பில் நீதிமன்றமே வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமித்து வாதிட உத்தரவிட்டது. அவர் வாதிடும் போது, ‘‘கிறிஸ்துவ இந்திய வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 42 பிரகாரம் கணவர் இறந்து விட்டால் அவரது விதவை மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ, குழந்தைகளோ இல்லை என்றால் மட்டுமே மகன் பெயரில் உள்ள சொத்துக்கு தாயாரும், உடன் பிறந்த சகோதர, சகோதரிகளும் உரிமை கோர முடியும்’’ என தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், கிறிஸ்துவ இந்திய வாரிசுரிமை சட்டத்தின் படி திருமணமான மகனின் சொத்தில் தாயார் உரிமை கோர முடியாது என ஏற்கெனவே 2021-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது என கூறி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிய வழக்கறிஞர் மித்ரா நேஷாவுக்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவி்த்துள்ளனர்.