தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால்தான், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் அமைதியான மாநிலம். எனவேதான், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஒரு வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால், அவர் எங்கு வாக்களிக்க விரும்புகிறார் என்ற ஒப்புதல் பெற்ற பிறகே, மற்றொரு இடத்தில் உள்ள பெயர் நீக்கப்படும்.
தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்லூரிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன், இதுகுறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து, தேர்தலின்போது ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறினார்.