யாழ்.நல்லூர் ஆலய வீதியில் இடர்படும் மக்கள்

110 0

யாழ்.நல்லூர் கந்தசாமி ஆலய வீதிகளில் மழை நீர் தேங்கி மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தியவாறு இருக்கும் நிலை தொடர்ந்தவாறே காணப்படுகிறது.

கந்தசட்டி விரத காலமான இன்றைய சூழலில் ஆலயத்திற்கு செல்லும் முன் வீதி மற்றும் தெற்குப்பக்க வீதிகளில் அதிகளவான மழைநீர் தேங்கி நிற்கின்றது.

இந்த வீதியே யாழ் – பருத்தித்துறை வீதியாகவும் அமைந்துள்ளதால் பயனிகள் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.

ஆலயத்தின் முன்னால் உள்ள வீதியில் பாதசாரிகள் கடவையும் அதனை அடுத்துள்ள வளைவும் நீரால் நிரம்பியுள்ள காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது பாய்கின்றமை மக்களின் விசனத்துக்கு உள்ளாகின்றது.

நீரின் இந்த குழப்பமும் நீர் தேங்கியிருப்பதும் ஆலயத்திற்குள் நுளையும் போது அசௌகரியமாக இருப்பதாக முருக பக்தர்கள் மனம் நொந்து கொள்வதை அவதானிக்க கூடியதாய் உள்ளது.

நடைபாதை வியாபாரிகளும் பாதசாரிகளும் இந்த வீதியின் இயல்புக்கு மாறான தோற்றத்தால் சிரமப்படுவதாக நடைபாதை வியாபாரிகள் சிலர் குறிப்பிட்டனர்.

மழையின் அளவு அதிகமாகும் போது தேங்கும் நீரின் அளவும் அதிகரிக்கிறது.வீதியை விட்டு நீர் பாய்ந்தோடும் அளவு குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.வாய்கால் வழி வழிந்தோடும் நீரோட்டத்தை விரைவாக்க முடிந்தால் இப்படி நீர் தேங்காது என மக்கள் குறிப்பிடுவதும் சுட்டிக் காட்டத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் உள்ள வீதிகளில் மழைக்காலத்தில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதனை அவதானிக்கலாம்.

சில இடங்களில் உரிய தரப்பினருக்கு சுட்டிக் காட்டப்பட்ட போதும் இவை சீர் செய்யப்படாது தொடர்ந்தவாறே இருப்பது கவலையளிப்பதாக இருக்கின்றது என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

வீதிகளில் ஏற்பட்ட தாழிறக்கங்களே இவ்வாறு நீர் தேங்கி நிற்பதற்கு காரணமாக அமையலாம்.

நீர் வழிந்தோடும்படி சிறிய மாற்றங்களை மேற்கொண்டால் இந்த சிக்கல் நிலையை தவிர்த்துக்கொள்ள முடியும் என துறைசார் அறிஞர்களிடம் இது பற்றிக் கேட்ட போது குறிப்பிட்டிருந்தனர்.

யாழ் மாநகரப் பகுதியில் உள்ள வீதிகளில் நீர் தேங்கி இருப்தால் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகள் நீக்கப்பட்டு இலகுவான பயனங்கள் நிகழ உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என மக்கள் வேண்டுகோள் விடுப்பதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும்.