மக்கள் செலுத்தும் வரி அரசாங்கத்துக்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா ?

59 0

பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் செலுத்தும் பெறுமதி சேர் வரி (வற்) அரசாங்கத்துக்கு முறையான வகையில் கிடைக்கப்பெறுகின்றதா என்பது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் வினவப்பட்டது.

தற்போது சுமார் பதின்மூன்றாயிரம் நிறுவனங்கள் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் உரிய வரியை அரசுக்கு செலுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து வரி அறவிடும் நிறுவனங்கள் அந்த வரி முறையாக அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெறுவதற்கான பொறிமுறையை தயாரிக்க வேண்டும் என இதன்போது குழு சுட்டிக்காட்டியது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) இராஜாங்க அமைச்சர்  லசந்த அழகியவண்ண தலைமையில் நேற்று கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கணினிக் கட்டமைப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொறுப்பேற்றுப் பராமரிக்க முடியுமா ? என குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட மனிதவளம் முறையாகக் கிடைக்காத நிலையில் அந்தக் கட்டமைப்பைப் பொறுப்பேற்றுப் பராமரிக்க முடியாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் அறிவித்தனர்.

கணினிக் கட்டமைப்புடன் 6 நிறுவனங்கள் இணைந்து செயற்படுவதுடன் கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் ஒருசில தொழில்நுட்பக் காரணங்களுக்காக கணனி கட்டமைப்புடன் இணைவது தாமதமடைந்துள்ளதாக குழுவில் புலப்பட்டது.

அதற்கமைய,உடனடியாக தமது கணினிக் கட்டமைப்பில் சம்பந்தப்பட்ட இற்றைப்படுத்தலை மேற்கொண்டு கணனி  கட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்துக்கு குழு பரிந்துரை வழங்கியது.

அதன் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு சமர்பிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தற்பொழுது பல வகைப்படுத்தல்களின் கீழ் அறவிடப்படும் வரி தொடர்பான முழுமையான அறிக்கையொன்றையும், அறவிடப்படவுள்ள 943 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை தொடர்பான முழுமையான அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

புதிய வரி செலுத்துபவர்களின் பதிவு குறித்தும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, 2023 இல் இதுவரை ஒரு இலட்சத்து 98,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

18 வயதுக்கு அதிகமான பிரஜைகள் சுமார் 16 மில்லியன் பேர் உள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும்இ அவர்களை வரி செலுத்தும் செயற்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்கு விசேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.