” விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்துக்கொண்டு, மற்றையவர்களை தாழ்த்திபேசி காலத்தை வீணடிப்பதைவிட, மலையக மாற்றம் பற்றியே நான் சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றேன். அதற்கு எமது மக்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், மலையகம் 200 நிகழ்வு தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் தொடர்பில், எதிர்வரும் 25 ஆம் திகதி விளக்கமளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
நுவரெலியா – நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று சனிக்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையகத்தில் வீடு கட்ட முடியாது, வீடு கட்டுவதற்கு நிதி இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு பதிலளிப்பதற்கு நாம் செல்லவில்லை. தனிநபர்களையும் விமர்சிக்கவில்லை. மாறாக செயலில் இறங்கினோம். அதன்பலனாகவே இன்று வீடுகளை கையளிக்க முடிந்துள்ளது.
நுவரெலியா மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலின்போது எனக்கு அமோக ஆதரவை வழங்கினர். எனவே, மக்கள் நலன்கருதி, அனைத்து மலையக கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சித்தேன். நல்லெண்ணத்துடன் செயற்பட்டேன். அதற்கான சிறந்த ஆரம்பத்தையும் வழங்கினேன். ஆனால் நேரில் ஒன்றையும், வெளியில் சென்று மற்றுமொன்றையும் பேசுபவர்கள்தான் இருக்கின்றனர்.
மலையகம் 200 நிகழ்வு குறித்து விமர்சனங்களை முன்வைத்து, தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல்களை பெறுவதற்கு மலையக சார்ந்த நபரொருவர் விண்ணப்பம் முன்வைத்துள்ளார். இதனை வரவேற்கின்றேன். நல்ல விசயம். ஆனால் அதே ஊடகர் ஏன் வீட்டு திட்டம் பற்றி தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல் பெறவில்லை? அதிலும் அரசியல் நடக்கின்றது.
நிறைய பேர் காசுக்கு விலைபோய் உள்ளனர். நாம் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தவில்லை. எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எனது உரை உள்ளது. அதன்போது நாம் 200 நிகழ்வு தொடர்பில் விளக்கமளிப்பேன்.
கடும் சவால்கள், போராட்டங்களுக்கு மத்தியிலேயே காணி உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
பழைய விடயங்களை வைத்து எனக்கு ஆதரவு வழங்க வேண்டியதில்லை. இப்போது என்ன செய்கின்றோம் என சிந்தித்து பாருங்கள், அதற்கான பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. மக்களுக்கு பிரச்சினை என்றால் நாம் வருகின்றோம், நெருக்கடியான சூழ்நிலையிலும் இந்த வீட்டு திட்டத்தை நிறைவு செய்துள்ளோம்.
எமக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. 10 ஆயிரம் வீடுகள்தான் தற்போது எம்வசம் உள்ளன. எனவேதான் காணி உரிமையை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கி, அதனை முன்னெடுத்துவருகின்றோம்.
காணி உரிமை வழங்குவதற்கு பாதீட்டில் 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. காணி உரிமையை வழங்குவதற்கு இந்நிதி போதுமானது.
சிலருக்கு தமது வீடுகளை தாமே நிர்மாணித்துக்கொள்ளகூடிய பொருளாதார பலம் உள்ளது, மேலும் சிலருக்கு வங்கி கடன் வாங்கி வீடுகளை நிர்மாணிக்க முடியும்.
வறுமை கோட்டின்கீழ் வாழ்பவர்களுக்குதான் இந்திய வீடமைப்பு திட்டம் வழங்கப்படும். அப்போதுதான் அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ” – என்றார்.