சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில்50 வயதுக்கு மேற்பட்ட அரசு பெண் ஊழியர்களை ஈடுபடுத்த தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் சசிகலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்டதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை. குறிப்பாக, பெண் ஆசிரியைகள், பெண் அலுவலர்கள் பலர்தேர்தல் பணிக்காக தொலைதூர கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்போது அவர்கள் பாதுகாப்பாக செல்லவும், இரவு நேரங்களில் தங்கவும், அவசர நேரங்களில் இயற்கை உபாதைகளை போக்கவும் எந்தஏற்பாடுகளும் செய்வதில்லை.
சில இடங்களில் உணவுகூட சரியாககிடைப்பதில்லை. தேர்தலுக்கு முதல்நாளேபணிக்கு செல்லும் பெண்கள், தேர்தல் முடிந்த பிறகும் நள்ளிரவு வரை வாக்குச்சாவடியிலேயே இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக சீல் வைத்து அனுப்பிய பிறகே வீடுகளுக்கு திரும்ப வேண்டியுள்ளது.
இரவு நேரங்களில் பெண் தேர்தல் அலுவலர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. போக்குவரத்து, உணவு, கழிப்பிடத்துடன் கூடிய தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்வரை 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் இருப்பதால் தேர்தல் பணிகளில் பெண்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் தெரிவித்ததாவது: இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 324-ன் கீழ் தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இதில் தேர்தல் பணியில் இருந்து சில பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட முடியாது.
அதேநேரம், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து, உணவு, இருப்பிடம், பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. அதை அதிகாரிகள் சரியாக செய்ய வேண்டும். ஒருவேளைஇதுபோன்ற வசதிகளை செய்து கொடுக்காவிட்டால் தேர்தல் பணிக்கு ஊழியர்களை அழைக்கக் கூடாது என கொள்கை முடிவுகளும் உள்ளன.
இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.