தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சி மாநாடு-2023 சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மத்திய மீன்வளம், கால்நடை, பால் வளம் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: நாட்டின் முன்னேற்றத்தை துரிதப்படுத்த உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை ஒருங்கிணைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கதி சக்தி திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்துக்காக இதுவரை இல்லாத அளவில் ரூ.100 லட்சம் கோடியை பிரதமர் ஒதுக்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக 16 மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உடனடி அனுமதி கிடைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக உள்கட்டமைப்பிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த இரண்டையும் ஒருசேர முன்னேற்றுவதன் மூலமாகவே உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும் என்பது பிரதமரின் நம்பிக்கை.
2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். 2027-ல் இந்தியாவை 3-வது இடத்துக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சத்தைஎட்டியுள்ளது. 200 விமான நிலையங்களை புதிதாக கட்டமைப்பதுடன், சாலை, உள்நாட்டு நீர்வழித்தட விரிவாக்க திட்டங்களின் மூலம் சரக்குப் போக்குவரத்தின் பயண தூரம், நேரம், செலவினம் ஆகியவற்றை குறைத்து வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் முருகன் பேசினார்.