ஒசாமா பின்லேடனின் வைரல் கடிதத்தால் அதிர்வலை – டிக் டாக் தடை கோரும் அமெரிக்கர்கள்!

100 0

கடந்த 2002-ல் அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய பிறகு தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், ‘அமெரிக்கர்களுக்கு ஒரு கடிதம்’ என்று ஒரு கடிதம் எழுதி இருந்தார். அது, அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்தச் சூழலில் அந்நாட்டில் சீன நாட்டு செயலியான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென்ற முழக்கத்தை அமெரிக்க நாட்டை சேர்ந்த அரசியல் பிரபலங்கள் முன்னெடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஒரு கன்டென்ட் எப்போது வைரலாகும் என்பதை கணிக்கவே முடியாது. அந்த வகையில் தான் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஒசாமா பின்லேடன், அமெரிக்கர்களுக்கு எழுதிய கடிதமும் வைரல் ஆகியுள்ளது. முதலில் டிக் டாக் செயலியில் இது பகிரப்பட்டுள்ளது. அப்படியே காட்டுத் தீ போல மற்ற சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகியுள்ளது. இரட்டை கோபுரத் தாக்குதலில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார் பின்லேடன். அதில் தங்கள் அமைப்பின் செயலை நியாயப்படுத்தி இருந்தார். கடந்த 2011-ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை சுட்டுக் கொன்றது அமெரிக்கா.

இந்தச் சூழலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜென் Z’ தலைமுறையினரின் பார்வைக்கு அந்தக் கடிதம் கிடைத்துள்ளது. இதில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பின்லேடன் கருத்து சொல்லி உள்ளதாக சொல்லபடுகிறது. தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை மையப்படுத்தி இது மீண்டும் பகிரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் ஒசாமா பின்லேடனின் கடிதம் வைரல் ஆனதும் ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனம் தங்களது தளத்தில் இருந்து அதனை நீக்கி உள்ளது. அதற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. தங்களது தளத்தில் கடந்த 2002 முதல் கார்டியன் வைத்திருந்தது. தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஒசாமா பின்லேடனின் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட, அது அமெரிக்க அரசியல் அமைப்பு தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

 

 

 

அமெரிக்காவில் சீன செயிலியான டிக் டாக்கை தடை செய்யுங்கள்: குடியரசுக் கட்சியை சேர்ந்த நிக்கி ஹேலே, “அமெரிக்கர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்துக்கு வாய்ப்பு வழங்குவதை நிறுத்துங்கள். பல ஆயிரம் பேரை கொன்ற தீவிரவாதி பின்லேடனுக்கு ஆதரவாக சமூக வலைதள பயனர்கள் உள்ளனர். இது அந்நியர்கள் சமூக வலைதளத்தில் மேற்கொள்ளும் விஷமத்தனம் வாய்ந்த கொள்கைக்கு உதாரணம். டிக் டாக்கை தடை செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் உறுப்பினரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மார்ஷா பிளாக்பர்னும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில் ஒசாமா கடிதம் சார்ந்த பதிவுகளை டிக் டாக் தளம் நீக்கி வருவதாக தகவல். இந்தப் பதிவுகள் தங்களது கொள்கை முடிவுகளை மீறி உள்ளதாக டிக் டாக் பதிலும் தந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது மாதத்துக்கு சுமார் 150 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை டிக் டாக் இந்தியாவில் கொண்டிருந்தது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகள் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளன. இந்தப் பட்டியலில் நேபாளம் அண்மையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.