ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீண்ட கால பொருளாதார திட்டமிடலாகவே 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், அதன் பின்னர் கடன் மறுசீரமைப்புக்கள் இலகுவாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நீண்ட கால கொள்கைத் திட்டமிடலுடன் வரவு – செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் முதல் சாதாரண மக்கள் வரை சகலருக்கும் சலுகைகளையும், நிவாரணங்களையும் வழங்கும் வரவு – செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது. எனினும் இது தேர்தல் வரவு – செலவு திட்டமாகும் என்று எதிர்க்கட்சிகள் தவறாக விமர்சனங்களை முன்வைக்கின்றன.
அரச ஊழியர்களுக்கான 10 000 ரூபா கொடுப்பனவு நிச்சயம் வழங்கப்படும். முதற்காலாண்டில் அரசாங்கம் எவ்வாறான வருமானத்தை பெற்றுக் கொள்கின்றது என்பது தொடர்பான மதிப்பீட்டுக்காகவே அந்த கொடுப்பனவை ஏப்ரலில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எந்தக் காரணத்துக்காகவும் அந்த கொடுப்பனவு இடைநிறுத்தப்படாது.
தேசிய திட்டமிடல்களால் மாத்திரம் பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்ய முடியாது. மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்துடன் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களும் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கவிருப்பது மிகச் சிறிய கடன் தொகை என்ற போதிலும், அதன் மூலம் எமக்கு கிடைக்கும் அங்கீகாரம் முக்கியத்துவமுடையதாகும்.
எவ்வாறிருப்பினும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை கிடைக்கும் என்று நம்புகின்றோம். அத்தோடு வரவு – செலவு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும் என்றார்.