விற்பதற்கு ஏதும் இல்லாததால் ஜனாதிபதி நாட்டின் நீர் வளத்துக்கும் விலைபேசியுள்ளார்

53 0

காணி மற்றும் அரச கட்டிடங்களுக்கு விலை பேசி முடிந்த நிலையில் விற்பதற்கு ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது நாட்டின் நீர் வளத்துக்கும் விலைபேசப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் டிஸ்டிலேன்டை காண்பித்து ஒட்டுமொத்த மக்களையும் சோமாலியாவுக்குள் தள்ளும் முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். ஊழல்வாதிகளுக்கு மீண்டும் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்தோம் ஆகவே அவர் எமது கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுனவினர் தெரிவு செய்ததால் அவர்களின் விருப்பத்துக்கு அமைய செயற்பட முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்துக்கு இவர்கள் உரிமை கோருகிறார்கள். 2002 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட புதிய லிபரல்வாத கொள்கைக்கு அமையவே ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். நாட்டின் வளங்களை விற்றல்,கடன் பெறல்,வரி விதித்தல்,விற்று உண்ணுதல் என்பனவே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் பசுமை பொருளாதார வரவு செலவுத் திட்டம், டிஜிட்டல் வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு  பலவற்றை சமர்ப்பித்தார். ஆனால் எவையும் நடைமுறைக்கு சாத்தியமாகவில்லை. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் டிஸ்டிலேன்டை காண்பித்து ஒட்டுமொத்த மக்களையும் சோமாலியாவுக்குள் தள்ளும் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.

வரி விதித்தல், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு மற்றும் விற்பனை செய்தல், கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் விலையேற்றம், மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் ஸ்ரீ லங்கா டெலிகொம்,காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களை விற்க இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால் விற்பனைக்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிலம்,அரச கட்டிடங்களுக்கு விலைபேசியுள்ள நிலையில் விற்பதற்கு ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது நாட்டின் நீர்வளத்தையும் விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.’நீர் சந்தை முகாமைத்துவம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு நீர்வளத்தை விற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஒன்றும் புதிதல்ல,

முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம நீர்பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்த போது இதே யோசனை கொண்டு வரப்பட்டது.விவசாயிகள் மத்தியில் இருந்து எழுந்த போராட்டத்தினால் அந்த யோசனை பிற்போடப்பட்டது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தற்போது மீண்டும் அந்த யோசனைக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.இதற்கான எவ்வித யோசனைகளும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.மத்திய வங்கியின் ஊழல் மோசடியில் பெயர் குறிப்பிட்ட அர்ஜூன அலோசியஸ் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதன் பின்னர்  மீண்டும் வலுப்பெற்றுள்ளார்.

அர்ஜூன அலோசியஸின் மதுபான உற்பத்தி நிறுவனம் இந்த ஆண்டு மாத்திரம் 148 கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் முறையான வரி செலுத்தப்படவில்லை. போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட  55949 மதுபான போத்தல்கள்  கைப்பற்றப்பட்டன. இவற்றில் 51361 போத்தல்கள் அர்ஜூன அலோசியஸின் மென்டிஸ் நிறுவனத்துக்குரியது. ஆகவே ஊழலை இல்லாதொழிக்க எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஊழல் மோசயாளர்களுக்கு  வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.