ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் நாட்டை முன்னேறக்கூடிய எந்த திட்டமும் இல்லை. நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப வரவு செலவுத் திட்டம் இருக்குமாயின் நாட்டில் அரசாங்கம் எதற்கு? இதன் பின்னரும் ஜனாதிபதியினால் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் அதை விளங்கிக் கொள்வார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்
நீண்ட காலம் அரசியலில் ஈடுபடுபவர் என்ற வகையில் நாடு வங்குரோத்து அடைவதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு பிரதான காரணம்.
இன்று புராதன கதைகளையும், நகைச்சுவை கதைகளையும் கூறி வெறும் வார்த்தைகளால் மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார்.
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி இடத்தில் எந்தவொரு தீர்வும் கிடையாது. டீல் அரசியலையும், கடன் விற்பனை செய்யும் வழிமுறைகளையுமே அவர் தொடர்ந்தும் பின்பற்றுகிறார்.
இதேவேளை சர்வதேச நாணயத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நாட்டின் வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும் என கூறுகிறார்கள். அவ்வாறாயின் நாட்டிற்கு நிதி அமைச்சர் எதற்கு? அமைச்சரவை எதற்கு? பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை ஏன் முன்வைக்க வேண்டும்? இந்த பொறுப்பினை சர்வதேச நாணயத்திற்கு ஒப்படைத்தால் இதனை விட இலகுவாக இருக்கும். அதன்மூலம் நிதியை சேமிக்கலாம் அல்லவா.
நாட்டின் ஜனாதிபதி, அரசாங்கம், அமைச்சரவை சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது கட்டாயமாக நாட்டுக்கு பொருந்தக்கூடியதும், மக்களுக்கு பொருத்தமானதும், எமது கொள்கைகளுக்கு ஏற்றாற்போலதொரு வரவு செலவுத் திட்டத்தையுமே கொண்டு வரவேண்டும்.
எமது கொள்கைகளுக்கு அமைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமானால் நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று தேவையில்லை.
எனவே கொள்கையில்லாத, நோக்கமில்லாத அரசாங்கம் ஒன்றே நாட்டில் உள்ளது. நாட்டு மக்கள் உறுதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளனர். அடுத்த தேர்தலில் மாற்றமொன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளனர் என்றார்.