மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க விவசாயத்திணைக்களம் உதவி!

132 0

ஐந்தாண்டுகளுக்கு இலங்கைச் சிறார்களுக்கான McGovern-Dole பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக 32.5 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA) உறுதியளித்துள்ளது.

பசியைக் குறைத்து கல்வியறிவு மற்றும் ஆரம்பக்கல்வியை மேம்படுத்தும் ஒரு உணவு உதவி முன்முயற்சியான கல்வி மற்றும் சிறார்களின் போசாக்கிற்கான McGovern-Dole சர்வதேச உணவு நிகழ்ச்சித்திட்டத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) புதிதாக ஒரு 32.5 மில்லியன் டொலர் நிதியினை வழங்குவதை அறிவிப்பதில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது.

பாடசாலை உணவுகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் தொடர்புடைய உதவிகளை வழங்குவதன் மூலம், மாணவர்கள் பாடசாலைகளில் சேர்தல் மற்றும் அவர்களது கல்வி நடவடிக்கைகளின் செயற்திறனை அதிகரிப்பதற்கு McGovern-Dole செயற்திட்டங்கள் உதவுகின்றன.

இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட சகதரப்பினர்களுடன் இணைந்து Save the Children அமைப்பினால் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு முன்முயற்சியின் அடிப்படையில், நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 200,000 இற்கும் மேற்பட்ட இலங்கைச் சிறார்கள் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இம்முன்முயற்சியின் மூலம் பயனடைவார்கள்.

அமெரிக்க நிதியுதவியுடன் கூடிய பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே செயற்பட்டு வரும் பல இடங்களுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், “பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இலங்கைச் சிறுவர்களின் வாழ்வில் நிலைமாற்றங்களை ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். இலங்கையின்  பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் முன்முயற்சிக்கு உதவிசெய்வதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை USDA இன் கல்வி மற்றும் சிறார்களின் போசாக்கிற்கான McGovern-Dole சர்வதேச உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் இந்த மேலதிக 32.5 மில்லியன் டொலர் பங்களிப்பு எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்ச்சித் திட்டங்கள் மிகவும் முக்கியமானதாகும். அவை நாடு முழுவதும் உள்ள சிறார்களின் போசாக்கு மற்றும் கல்வியினை மேம்படுத்துவதுடன், இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கான எமது நிலையான அர்ப்பணிப்பினையும் பிரதிபலிக்கின்றன.” என தெரிவித்தார்.

USDA இன் உதவியுடனான சந்தைக் கூட்டணிகள் ஊடாக கல்வியறிவு மற்றும் கவனிக்கும் தன்மைக்கான தன்னாட்சியை மேம்படுத்தல் (PALAM/A) எனும் 27.5 மில்லியன் டொலர் பெறுமதியான செயற்திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இந்தப் புதிய நிதியுதவி அமைகிறது. (PALAM/A)

செயற்திட்டத்தின் ஊடாக (நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய) ஏழு மாவட்டங்களில் உள்ள 852 பாடசாலைகளில் பயிலும் 95,000இற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு அரசாங்கத்தின் பாடசாலை உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சத்தான உணவை வழங்குவதற்காக Save the Children அமைப்பானது கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகிய அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படுகிறது. இத்திட்டமானது குழந்தைகளின் கல்வியறிவுத் திறன், ஆசிரியர்களின் தொழில்வாண்மைப் பயிற்சி ஆகியவற்றின் அபிவிருத்தியினை மேம்படுத்துவதுடன் பாடசாலைகளில் பாதுகாப்பான குடிநீர், மேம்பட்ட சமையலறை வசதிகள் மற்றும் துப்புரவு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் உதவி செய்கிறது.

உலகெங்கிலுமுள்ள குறைந்த வருமானமும், உணவுப் பற்றாக்குறையும் உடைய நாடுகளில் கல்வி, சிறார்களின் விருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு கல்வி மற்றும் சிறார்களின் போசாக்கிற்கான McGovern-Dole சர்வதேச உணவு நிகழ்ச்சித்திட்டம் உதவுகிறது. பாடசாலை மாணவர்களுக்கு உணவளித்தல் மற்றும் தாய் சேய் போசாக்கு தொடர்பான செயற்திட்டங்களுக்கு உதவிசெய்வதற்காக அமெரிக்க விவசாயப் பொருட்களையும், நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்குகிறது.

வலுவான இருநாட்டு மக்களுக்குமிடையிலான உறவுகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்படும் ஒரு வளமான வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு குறிக்கிறது. எமது இரு நாடுகளும் ஒன்றிணைந்து அடைந்துள்ள முன்னேற்றமானது ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கையர்களுக்கு உதவிசெய்யும்.