அரச வருமான இலக்கை தொகையில் மாத்திரம் குறிப்பிட்ட ஜனாதிபதி வருமானத்தை திரட்டிக்கொள்ளும் யோசனைகளை குறிப்பிடவில்லை.
வரி விதிப்பு மாத்திரமே அவரது பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது.ஆகவே இந்த யோசனையை செயற்படுத்தினால் அடுத்த ஆண்டில் முதல் ஆறு மாத காலத்துக்குள் மக்கள் போராட்டம் பாரியதொரு புரட்சியாக வெடிக்கும்.
ஆகவே மக்கள் போராட்டத்தை தடுக்க ஆட்சியாளர்களும், ஆளும் தரப்பும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் யதார்த்தபூர்வமற்றது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் பல முன்மொழிவுகள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டும் முன்வைக்கப்பட்டன.ஆனால் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமான இலக்கு 3130 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டது.ஆனால் தற்போது 2500 பில்லியன் ரூபா வருமானம் திரட்டப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடையவில்லை.இவ்வாறான நிலையில் 2024 ஆம் ஆண்டு 3820 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது.2022 ஆம் ஆண்டு 8.5 சதவீதமாக காணப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியை 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15.5 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இது முற்றிலும் சாத்தியமற்றது.இந்த யோசனைகளை செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும்.
2023 ஆம் ஆண்டு பெறுமதி சேர் வரி ஊடாக 908 பில்லியன் ரூபா வரி வருமானம் எதிர்பார்க்கப்பட்டது,ஆனால் நிறைவடைந்த 09 மாதகாலப்பகுதிக்குள் 680 பில்லியன் ரூபா வருமானமே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வரி வருமானத்தை பெறுவதற்காக ஒட்டுமொத்த மக்களின் உழைப்பு மற்றும் சேமிப்பு சூறையாடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு எரிபொருளுக்கும் 10 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு 88 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.ஒரு லீற்றர் டீசலில் இருந்து 80 வரியும்,ஒரு லீற்றர் பெற்றோலில் இருந்து 120 ரூபா வரியும் அரசுக்கு செலுத்தப்படுகிறது.ஆகவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்மடைகிறது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மின்சார சபை கடந்த எட்டுமாத காலப்பகுதியில் 20 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.ஆனால் கடந்த செப்டெம்பர்,ஒக்டோபர் ஆகிய மாதங்களில் மாத்திரம் மின்சார சபை 20 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.எரிபொருள் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்பால் தொழிற்றுறையல்ல மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்கள் தமது சொத்துக்களையும்,தங்க ஆபரணங்களையும் விற்று வாழ்கிறார்கள்.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்,அரச வருமானம் எதிர்பார்ப்பு மற்றும் வரி விதிப்பு ஆகிய தீர்மானங்களினால் அடுத்த ஆண்டு மக்கள் போராட்டம் மீண்டும் தலைத்தூக்கும்.
முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது அது அவரது இறுதி வரவு செலவுத் திட்டம் என்பதை அவரிடம் குறிப்பிட்டேன்,அதே போல் தோற்றம் பெறவுள்ள மக்கள் போராட்டத்தை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த சரத் வீரசேகரவிடம் குறிப்பிட்டேன்.எனது கருத்து உண்மையாகியுள்ளது.
அரச வருமான இலக்கை தொகையில் மாத்திரம் குறிப்பிட்ட ஜனாதிபதி வருமானத்தை திரட்டிக்கொள்ளும் யோசனைகளை குறிப்பிடவில்லை.வரி விதிப்பு மாத்திரமே அவரது பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது.
ஆகவே இந்த யோசனையை செயற்படுத்தினால் அடுத்த ஆண்டில் முதல் ஆறு மாத காலத்துக்குள் மக்கள் போராட்டம் பாரியதொரு புரட்சியாக வெடிக்கும்.ஆகவே மக்கள் போராட்டத்தை தடுக்க ஆட்சியாளர்களும்,ஆளும் தரப்பும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றார்.