அவசர மருந்து உபகரணங்கள் கொள்வனவுக்காக பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்

55 0

சுகாதாரத் துறைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பொறிமுறையொன்றை பாராளுமன்றத்துடன் இணைந்ததாக முன்னெடுப்பது அவசியமாகும் என நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். 

அவசர மருந்து கொள்வனவை நிறுத்தியுள்ள நிலையில் எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் நெருக்கடிகள் தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் புதன்கிழமை (15) பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்க நிதி குழுவின் தலைவர் என்ற வகையில் முன் வைத்துள்ள அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதுதொடர்பில்  கவனம் செலுத்தப்படாவிட்டால் மீண்டும் பாராளுமன்றம் இரண்டாக பிளவு படும். விவாதங்கள் நடத்தப்பட்டு அந்த மருந்தினால் இவ்வளவு பேர் மரணமடைந்தனர். இந்த மருந்தினால் இந்தளவு மரணம் ஏற்பட்டுள்ளது என்ற விவாதமே தொடரும்.

மருந்துகளுக்கான பெறுகைக் கோரலை சாதாரண முறைப்படி மேற்கொள்வது தவறானது. அதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே முன்னாள் சுகாதார அமைச்சர் அவசர மருந்து கொள்வனவு முறையை அறிமுகப்படுத்தினார்.

எனினும் இந்த அவசர மருந்து கொள்வனவு மூலம் ஊழல் மோசடிகள் இடம் பெற்றதால் தற்போதைய சுகாதார அமைச்சர் அந்த முறையை இடை நிறுத்தியுள்ளார்.

அவராலும் கட்டுப்படுத்த முடியாத மாபியா இடம்பெறுவதால்தான் அவர் அந்த முறைமையை நிறுத்தினார் என நான் நினைக்கின்றேன்.

இந்த வகையில் எட்டு மாதம் அல்லது பத்து மாத காலம் தாழ்த்தி பெறுகைக்கோரலை மேற்கொண்டு மருந்துகளை கொள்வனவு செய்ய முற்பட்டால் நோயாளர்கள் மரணம் அடைவதை தடுக்க முடியாது.

அதனால் நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக குறுகிய காலத்தில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

எதிர்கொள்ள நேரும் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து அமைச்சரினால் கூட இது தொடர்பான தனியான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது. அதனால் பாராளுமன்றத்தோடு இணைந்ததாக பொறிமுறையொன்றை உருவாக்குவது அவசியமாகும்.

அந்த பொறிமுறையை நிதி தெரிவுக்குழு போன்ற நிறுவனத்தை அடிப்படையாக வைத்து உருவாக்க முடியும். அதற்கான பொறிமுறையை தயாரிப்பதற்காக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.