பெரிய நாடுகள் விளைவுகள் எதையும் எதிர்கொள்ளாமல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்றால் உலகம் அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக மாறும் என கனேடிய பிரதமர் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுடனான தூதரக மோதல் நீடிக்கும் நிலையிலேயே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
காலிஸ்தானி அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால் பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்த இந்தியா அவரது குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ட்ரூடோ,
“கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரிந்தபோது, இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிய எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு நாங்கள் இந்தியாவை அணுகினோம்.
அதுமட்டுமின்றி, அமெரிக்கா போன்ற எங்கள் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளையும் நாங்கள் அணுகினோம்.
கனடா எப்போதும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடு என குறிப்பிட்டுள்ள ஜஸ்டின் ட்ருடோ, இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு பெரிய நாடுகள் விளைவுகள் எதையும் எதிர்கொள்ளாமல் சர்வதேச சட்டத்தை சர்வ சாதாரணமாக மீறுகிறது என்றால் உலகம் அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.மேலும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா முயற்சித்துள்ளது, அது தொடர்ந்து செய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.