அவுஸ்திரேலியாவின் சிட்னியின் பொட்டனி துறைமுகத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின் சரக்கு கப்பலின் வருகையை தடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் கரையில் நின்று கொடிகளை ஏந்தி கோசங்களை எழுப்பியஅதேவேளை ஏனையவர்கள் கடலிற்குள் இறங்கி இஸ்ரேலிய கப்பல் வரவுள்ள பகுதியை நோக்கி சென்றனர்.
சிட்னியின் பலஸ்தீனத்திற்கான நீதி இயக்கமும் பலஸ்தீனத்திற்கான தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இது இஸ்ரேலிய கப்பல்களின் வருகைக்கு எதிரான போராட்டத்தின் ஆரம்பம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட கப்பல் நிறுவனம் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை கொண்டு செல்கின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொட்டனி துறைமுகத்திற்கு கப்பல் வரும் ஒவ்வொரு தடவையும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் துறைமுகங்கள் உள்ளன இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு துறைமுகத்திலும் நாங்கள் போராடலாம் அவர்களை மண்டியிடச்செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை பொருளாதார ரீதியாக தாக்க தொடங்குங்கள் அது அவர்களை காயப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வேளை கப்பல் அந்த பகுதியில் இல்லை எனவும் அதன் வருகை தாமதமாகியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.