அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள்

129 0

அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இடம்பெற்ற பாலஸ்தீனியர்கள் சார்பு ஆர்ப்பாட்டங்களில் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளனர்.

இதேவேளை சிட்னியில் பணயக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இஸ்ரேல ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக அவுஸ்திரேலியாவில் வார இறுதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை சிட்னி மெல்பேர்னில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பிரிஸ்பேர்னிலும் பேரணி இடம்பெற்றுள்ளது.

 

காசாவை ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மரணபூமி என வைத்தியர்கள் வர்ணித்துள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட யுத்தத்தை தடுப்பதற்கான மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் மார்கிரட் பீவிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களிற்கு முன்னர் தீக்கிரையான உணவகத்தின் உரிமையாளர் தனது உணவகம் தீக்கிரையாக்கப்படலாம் என தனது பணியாளர்களிற்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது என  தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் பேரணியில் விக்டோரியாவின் கிறீன்ஸ் கட்சியின் தலைவர் சமந்தா இரட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மெல்பேர்னின் ஸ்வான்ஸ்டொன் வீதியை நோக்கி பேரணியாக சென்றவர்கள் யுத்தநிறுத்தம் சுதந்திர பாலஸ்தீனம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  கோசங்களை எழுப்பியுள்ளனர்.