கடற்படையின் பழமையான 3 போர் விமானங்களின் சேவை நிறைவு

311 0

இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய 3 பழமையான போர் விமானங்களின் சேவை நிறைவு பெறுகிறது. இவைகளை விடுவிக்கும் விழா அரக்கோணத்தில் நாளை நடக்கிறது.

இந்திய கடற்படையில் பணியாற்றிய ‘டுபோலெவ்-142 எம்’ ரக போர் விமானங்கள் 29 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துவிட்டு நாளை (புதன்கிழமை) பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. ரஷியா நாட்டு தயாரிப்பான இந்த போர் விமானங்கள் 1988-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன.

4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த கண்காணிப்பு போர் விமானம் எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்கும் திறன் கொண்டவை. இதுபோன்ற 8 விமானங்கள் இருந்த நிலையில், தற்போது 3 விமானங்கள் மட்டுமே பணியில் உள்ளன. இதுபோன்ற பழமையான கண்காணிப்பு விமானங்களுக்கு பதிலாக தற்போது ‘12 பி-81 போயிங்’ ரக விமானங்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வகை போர் விமானங்களும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்கும் திறன் கொண்டவையாகும். இவற்றில் இலகு ரக ராக்கெட் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. நவீன ரேடார்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. இதனால் கடற்படையில் உள்ள டுபோலெவ்-142 ரக விமானங்களை பணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

சேவையை நிறைவு செய்த இந்த விமானங்கள் கடற்படையில் எந்த விபத்தையும் சந்திக்காமல் 30 ஆயிரம் மணி நேரம் பறந்து இருக்கின்றன. கடற்படை சார்பில் நடந்த பல போர் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளில் பங்கெடுத்து உள்ளன. அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த 3 விமானங்களும் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

இதற்கான விழாவில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வையொட்டி நேற்று கண்காட்சி மற்றும் பயிற்சி ஒத்திகை நடந்தது. இதில் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.