காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்காக சுண்ணக்கல் அகழப்பட்ட பகுதிகள் தற்போது எவ்வாறு உள்ளதென்பதை அனைவரும் அறியவேண்டும். அத்தகைய சூழலே கிளிநொச்சி பொன்னாவெளியிலும் ஏற்படுமென சுற்றுச்சூழலியலாளரும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சருமான ஜங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
பூநகரி பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இரணைமாதா நகரில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்
காங்கேசன்துறையில் சுண்ணக்கல் அகழப்பட்ட பகுதிகள் தற்போது அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. அங்கு கடல் நீர் உட்புகுந்து எந்தவொரு பயன்பாடுமற்றதாக அப்பகுதிகள் உள்ளன.
இனிவருங்காலங்களில் சுண்ணக்கல் அகழ முடியாதென்ற வகையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கைவிட்டு பொன்னாவெளியில் கவனத்தை செலுத்துகின்றனர்.
அங்கும் சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு சுண்ணக்கல் அகழப்பட்டால் காங்கேசன்துறை போன்றே வெறும் அகழிகளே மக்களிற்கு மிஞ்சும். யாரோ சிலர் உழைத்துவிட்டு செல்ல எம்மக்களிற்கு வனந்தரமான மண்ணே மிஞ்சும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே நாம் உண்ணாத கடலட்டை பண்ணைகளிற்கென எமது கடற்கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜந்து ஆண்டுகளில் மீன் பிடிபடாத கடலாக எமது கடல் இருக்க போகின்றது.
ஒரு சில நூறு பேரது வருமானத்திற்காக அடுத்து வரும் காலங்களில் எமது பிரதான உணவாக இருக்கப்போகின்ற மீனை நாம் தொலைத்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
இதனிடையே கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு எதிராக அப்பிரதேச பொது மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
சுண்ணக்கல் அகழ்வு திட்டத்திற்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து நூறாவது நாளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அமைச்சரே எங்கள் கிராமங்களை விற்க இரகசிய கூட்டம் நடத்தாதே, கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதனிடையே பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணக் கல் அகழ்வு தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் திட்டத்தை வரவேற்கின்றோம் என்றும் இவ்விடத்தில் தொழிற்சாலை வருவது நல்லது என கருத்து வெளியிட்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.