தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் தினம் நவம்பர் 27ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டும் மாவீரர் தின நினைவேந்தலை மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தலை நடத்துவதற்கான சிரமதான பணிகள் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று சனிக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்தே சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இடம்பெறும் எனவும் இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.