சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி சபையில் கடும் குற்றச்சாட்டு

103 0

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பதவி விலகவேண்டும் என தெரிவித்து ஆளும் எதிர்க்கட்சி இணைந்து   வியாழக்கிழமை (09) கொண்டுவரப்பட்ட பிரேரணையை அனுமதிக்க வாக்களிப்பு கோரியபோதும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க மறுத்தமைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு தெரிவித்ததுடன் சர்வதேச அமைப்புகளுக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

பாராளுமன்றம்  வெள்ளிக்கிழமை (10) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது பிரதான நடவடிக்கைகளை அடுத்து. எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில், கிரிக்கெட் கட்டுப்பாடடு சபை பதவி விலகவேண்டும் என ஆளும் எதிர்க்கட்சி இணைந்து பிரேரணை கொண்டுவந்தோம்.

என்றாலும் பிரேரணையின் இறுதியில் பிரேரணையை அனுமதிக்க நாங்கள் வாக்களிப்பு கோரினோம். அதற்கு நீங்கள் அனுமதி வழங்க வில்லை. இது பாராளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் செயற்பாடு.

சபையில் எம்.பி. ஒருவருக்கு வாக்களிப்பு கோரும் உரிமை இருக்கிறதா இல்லையா என கேட்கிறோம்.  வாக்களிப்புக்கு செல்லுமாறு செயலாளர்கள் உங்களுக்கு ஆலாேசனை வழங்கியபோதும் அதனை நீங்கள் நிராகரித்து உறுப்பினர்களின் உரிமையை மீறியுள்ளீர்கள்.

நிலையியற் கட்ளையை மீறி எமது உரிமையை நீங்கள் அபகரித்துள்ளீர்கள். அவ்வாறு செயற்பட உங்களுக்கு மேலிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததா?

அத்துடன் சபாநாயகர் வாக்களிப்புக்கு செல்லாமல் இருந்தது சபாநாயகரின் மகளை லொத்தர் சபையின் தலைவராக நியமித்தமைக்காகவா என கேட்கிறோம்.

அதனால் சபாநாயகரின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச அமைப்புகளுக்கு எழுதுவோம். இதன்போது  செயலாளர்களின் ஆலாேசனைக்கு முரணாகவே சபாநாயகர் செயற்பட்டார் என்பதையும் நாங்கள் அதில் சுட்டிக்காட்டுவோம் என்றார்.

இதன்போது சந்திம வீரக்கொடி குறிப்பிடுகையில், பிரேரணைக்கு வாக்களிப்பு தேவை என நானே கேட்டேன்  அது உங்களுக்கு கேட்டபோதும் நீங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னரும் ஒரு எம்.பி.யாவது வாக்களிப்பு செல்லவேண்டும் என்றால், வாக்களிப்புக்கு செல்வதே பாராளுமன்ற சட்டம், அதுவே பாராளுமன்ற சம்பிரதாயம். அதனை நீங்கள் மீறியுள்ளீர்கள். நீங்கள் யாருடையதாவது தேவைக்கே செயற்படுகிறீர்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து அனுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பதவி விலகல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை ஆளும் எதிர்க்கட்சி இணைந்துகொண்டுவந்ததாகும்.  அதனால் அதற்கு வாக்களிப்பு கோரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அதனாலே நாங்கள் இறுதி நேரத்தில் சபையில் இருக்கவில்லை. வாக்களிப்பு கோருவதாக எமக்கு அறிவித்திருந்தால் நாங்கள் அதில் கலந்துகொண்டிருப்போம். அதேநேரம்  யாராவது உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பு கோரினால் வாக்களிப்பு செல்லுமாறு பணிப்பது சபாநாயகரின் பொறுப்பு சபாநாயகர் அதனை மீறி இருக்கிறார். என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,  பாராளுமன்றத்தில் 15பேர் கிரிக்கெட் சபையிடமிருந்து சம்பளம் பெறுவதாக அமைச்சர் ராெஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.

அந்த 15பேரையும் வெளிப்படுத்திக்கொள்ளலே நாங்கள் வாக்களிப்பு கோர தீர்மானித்தோம். அத்துடன் வாக்களிப்பு நேரத்தில் அனைவரும் சபைக்கு வருமாறு நான் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தேன்.

அத்துடன் சபாநாயகர் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை மீறி வருகிறார். அரசாங்கம் கொண்டுவரும் சில பிரேரணைகளுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்பு கோருவதை தடுக்கும் வகையில் பூனை போன்று வாசித்துக்கொண்டு செல்கிறார் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிடுகையில், சபாநாயகர் தொடர்ந்து பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறி செயற்படுகிறார். அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொணடுவரப்படவேண்டும் என்றார்.

இறுதியில் இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், குறித்த பிரேரணை ஆளும் எதிர்க்கட்சி இணைந்தே கொண்டுவந்தது. அதனால் இறுதியில் பிரேரணைக்கு சபை இணக்கமா என 3 தடவை கேட்டேன் சபையின் அனுமதி கிடைத்தமையால் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு செய்தேன் என்றார்.