யாழில் உள்ள 4வது உலக தமிழராட்சி மாநாடு படுகொலை நினைவாலயம்

358 0

உலகளவில் புகழ் பெற்ற ஈழத்தமிழர்களின் வாழிடங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு 4 வது உலக தமிழராட்சி மாநாடு நடைபெற்றிருந்தது.

ஜனவரி மாதம் 3 ம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையான காலத்தில் திரு சு.வித்தியானந்தன் அவர்களின் தலைமையில் பெரும் கோலாகாலமாக நிகழ்ந்தது. சிறிலங்காவின் காவல்துறையினரது திட்டமிட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தமிழராட்சி மாநாட்டின் இறுதி நாளான பத்தாம் திகதியன்று பதினொரு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

966 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடர்ச்சியாக 1974.01.03 அன்று ஆரம்பமானது 4 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு.

இது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. திரு சு.வித்தியானந்தன் அவர்கள் தலைமையேற்றிருந்தார்.

ஆரம்பம் முதலே பல சவால்களை எதிர்கொண்ட இந்த ஏற்பாடு இறுதியாக யாழில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இறுதி நாள் நிகழ்வாக பரிசளிப்பும் விருந்துபசாரமும் நடத்த ஏற்பாடாகி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா காவல்துறையின் உதவி காவல்துறை பரிசோதகர் சந்திரசேகரா தலைமையிலான குழுவும் சிங்கள காடையர்கள் குழுவும் இணைந்து தமிழராட்சி மாநாட்டில் கலந்து கொண்டோர் மீது தாக்குதலை நடத்தியது.

அந்த தாக்குதலில் பதினொரு தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர். 1974.01.10 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோர்

01) வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்)

02) பரம்சோதி சரவணபவன் (வயது 26)

03) வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32)

04) ஜோன்பிடலிஸ் சிக்மறிலிங்கம் (வயது 52 – ஆசிரியர்)

05) புலேந்திரன் அருளப்பு (வயது 53)

06) இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்)

08) இராஜன் தேவரட்ணம் (வயது 26)

09) சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்)

10) சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்) ஆகியோர் உள்ளடங்க பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்பதும் அதற்கு பிறகு அந்த தவறு இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பினால் திருத்திக்கொள்ளபடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உதவி பரிசோதகரான சந்திரசேகரா அப்போதைய பிரதமாரன சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் பரிசோதகராக பதவியுயர்வு வழங்கப்பட்டார் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

தமிழ் மொழியின் பால் ஆர்வமிகு ஆர்வலரான தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964 ஆம் ஆண்டில் புதுடில்லியில் நடைபெற்ற உலக கீழைத்தேய கல்வி ஆய்வாளர் மாநாட்டில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 1964.01.26 ஆம் நாளில் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கொரு முறை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. எனும் காலப்போக்கில் அந்த தீர்மானத்தில் தளம்பல் நிகழ்ந்ததை மாநாடுகள் நடைபெற்ற தினங்களை கருதும் போது உணர முடியும்.

1 வது தமிழராட்சி மாநாடு 1966.04.16 -23 அன்று கோலாலம்பூரில்(மலேசியா) தனிநாயகம் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.

2 வது தமிழராட்சி மாநாடு 1968.01.3 -10 அன்று சென்னையில் ( இந்நியா தமிழ்நாடு) திரு சி.என் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

3 வது தமிழராட்சி மாநாடு 1970.01.15 -18 அன்று பாரீசில் (பிரான்ஸ்) பேராசிரியர் ஜீன் பிலியோசா தலைமையில் நடைபெற்றது.

4 வது தமிழராட்சி மாநாடு 1974.01.03 -10 அன்று யாழ்ப்பாணம் (இலங்கை) திரு சு.வித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

5 வது தமிழராட்சி மாநாடு 1981.01.4 -10 அன்று மதுரையில் (இந்தியா தமிழ்நாடு)

6 வது தமிழராட்சி மாநாடு 1989.11.15 -19 அன்று கோலாலம்பூரில் (மலேசியா)

7 வது தமிழராட்சி மாநாடு 1989.12.01- 08 அன்று மொரீசியஸ் (ஆபிரிக்கா)

8 வது தமிழராட்சி மாநாடு 1995.01.01 – 05 அன்று தாஞ்சாவூரில் (இந்தியா)

9 வது தமிழராட்சி மாநாடு 2015.01.29 – பெப்01 அன்று கோலாலம்பூரில் (மலேசியா)

10 வது தமிழராட்சி மாநாடு 2019.07.03 – 07 அன்று சிகாகோ (அமெரிக்கா)

11 வது தமிழராட்சி மாநாடு 2023.06.16 -18 அன்று சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.எனினும் அவ்வாறு இறுதியில் நடைபெறவில்லை.

2023.06.07- 09 சென்னையிலும் 2023.07.21- 23 கோலாலம்பூரிலுமாக இரு தடவைகள் நடைபெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களுக்கான நினைவாலயம்

4 வது தமிழராட்சி மாநாட்டில் கலந்து கொண்டதால் கொல்லப்பட்ட பதினொரு தமிழர்கள் நினைவாக வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு காலங்களில் பல அரசியலீடுபாட்டாளர்களால் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும் நினைவாலயம் அதன் பின்னர் மீண்டும் அதே நினைவு நாளுக்காக அடுத்த வருடம் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு நிகழ்த்தப்படுகின்றது.

அண்மையில் ஒரு மழை நாளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தின் முன்னுள்ள 4 வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களது நினைவாலயம் புகைப்படமாக்கப்பட்டது.

நினைவாலயம் அழுக்கு நீரால் நிரம்பியிருந்ததோடு உள்ளே செல்ல முடியாதவாறாக இருந்தது. கட்டுமானத்தின் பகுதிகளில் பூசப்பட்ட வெள்ளை நிறம் சிதைந்து அதன் சீர்மையை அது இழந்திருந்து.

நினைவு கொள்ளும் நாளன்று மட்டும் சுத்தமாக்கப்பட்டு அழகூட்டி விளக்கேற்றி விட்டு ஏனைய நாட்களில் கவனிப்பாரற்று கைவிடுதல் போன்ற எண்ணக்கருவை அதன் தோற்றம் தருவதாக சிலபொதுமக்களிடம் இது குறித்து கருத்துக் கேட்டிருந்த போது எடுத்துரைத்திருந்தனர்.

மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை

நினைவாலயம் அருகே நிலக்கடலை விற்பனை செய்வோரும் குளிர்களி விற்பனை செய்வோரும் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆடைகள் விற்பனையில் சங்கமித்திருந்த சிலரிடமும் (அன்றைய நாளில்) என பலரிடம் இந்த கட்டிடம் என்ன?

என்ற வினவலுக்கு அதிகமானோரிடமிருந்து ஆர்வமற்ற பதில்களையே பெற முடிந்தது. தெரியவில்லை என்றவர்களிடம் நீங்கள் எந்த இடம்? என்ற மற்றைய கேள்விக்கு நாங்கள் யாழ்ப்பாணம், நாங்கள் அச்சுவேலி, நாங்கள் அரியாலை, நாங்கள் கோப்பாய் என யாழ் மாவட்ட ஊர்களின் பெயர்களையே அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஒரு சிலரிடம் இருந்தே உலகத் தமிழராட்சி மாநாட்டில் நடந்த படுகொலை சம்பவத்தில் உயிர் துறந்தோரது நினைவாலயம்.என்ற பதில் கிடைத்திருந்தது. இந்த மக்களிடையேயான கருத்தாடல்கள் பற்றி யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் சுட்டிக்காட்டி கருத்துக் கேட்ட போது அவர் யோசிக்க வேண்டிய விடயம் தான் என்றார்.

இத்தகைய போக்கு கவலையளிப்பதாகவும் இது மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அரசியலாளர்கள் மட்டுமல்லாது தமிழார்வலர்களும் இந்த விடயத்தில் கவனமெடுத்து தமிழர் துயரங்களை வரலாற்று நிகழ்வுகளை இளம் தலைமுறையினருக்கு தெளிவுபடுத்தி அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும்.

இன்றைய இளையவர்களே நாளைய எங்கள் சமூகம் என்று குறிப்பிட்டார்.

புனித பூமிகளாக

தமிழ் எங்கள் மொழி.தமிழ் எங்கள் அடையாளம்.தமிழுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைவரையும் நினைவு கொள்ளும் பண்பாட்டியலோடு நாம் வாழ்ந்து செல்ல வேண்டும்.

எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்லாது தாயகப் பரப்பில் நிகழ்வுகளுடன் கூடிய இடங்கள் எப்போதுமே தூய்மையாக பேணுவதோடு அந்த இடங்களுடன் தொடர்புடைய நிகழ்வுகளை அந்த இடங்களுக்குச் செல்வோருக்கும் எடுத்துரைக்கும் வகையிலான முயற்சிகள் எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என மொழிசார் புலமையாளர்கள் பலரின் கருத்தாக அமைகிறது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக திகழுமா?

யாழ் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் இந்த நினைவாலயம் கவனத்தை ஈர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குண்டான முயற்சிகள் அவசியமாகின்றன.

இது போலவே இலங்கையின் வடபுலத்திலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மொழி சார்ந்த தமிழர் போரியல் சார்ந்த நிகழ்வுகளுடன் கூடிய இடங்கள் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்துக்கொள்ளுமாயின் ஈழத்தின் துயரமிகு வலிகளும் உலகப்பரப்பில் தனிமனித மனங்களில் அலசப்படுவதற்கான வாய்ப்பொன்று தோற்றுவிக்கப்படும் என நாற்றில் தமிழ்ச்சங்கம் சார்பாக கருத்திட்ட இளம் எழுத்தாளரொருவர் தன் எதிர்பார்ப்பை பகிர்ந்து கொண்டமையும் இங்கே இது சார்பில் குறிப்பிடத்தக்கது.