“100 நாள் கூலித் தொழிலாளர்களுக்கு பாக்கி வைப்பது எல்லாம் ஓர் அரசா?” – கே.பாலகிருஷ்ணன் சாடல்

78 0

மத்திய அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், “100 நாள் கூலித் தொழிலாளர்களுக்கு பாக்கி வைக்கிற அரசாங்கம், என்ன அரசாங்கம்?” என்று அவர் வினவினார்.

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர். கே.பாலகிருஷ்ணன் இன்று (நவ.6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் வைத்தால் தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் மற்றும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் கிடைக்காத வகையில் பெரிய தாக்குதலை மத்திய அரசு செய்துள்ளது. இதனால் மின்சார வாரியம் என்பதை ஒழித்துவிட்டு தனியார் கையில் ஒப்படைக்க மத்திய அரசு துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு ஸ்மார்ட் மீட்டர் வைக்கவில்லை என்றால் உதய் திட்டத்தின் கீழ் நீதி உதவி வழங்க முடியாது என மாநில அரசை கட்டாயப்படுத்துகிறது. இதற்கு கேரளா அரசு மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டாலும், ஸ்மார்ட் மீட்டரை வைக்க முடியாது என்று கூறியதுபோல தமிழக அரசும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 25-ம் தேதி முதல் 15 நாட்கள் மின் அலுவலகங்களில் ஸ்மார்ட் மீட்டரை வைக்கக் கூடாது என தமிழக முழுவதும் மனு கொடுக்கும் நிகழ்வை நடத்த உள்ளோம். மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். ஆனால் மாநில அரசு மின் கட்டணத்தை ஏற்றுவதாக பாஜகவினர் பேசிவருகிறார்கள். குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் இரட்டிப்பு வேலையை பாஜக செய்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கூறி வருகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளது.