எமக்கு ஆதரவாக செயற்படாவிடின் நாம் சீனாவுடன் சேர்ந்துவிடுவோம் எனக்கூறி இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் தாம் ஒருபோதும் செயற்படப்போவதில்லை எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மானசீகமான முறையில் தாம் இந்தியாவின் நண்பராகச் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நாம் 200’ நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகைதந்திருந்த இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களில் மகாநாயக்க தேரர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கான செயற்திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 15 மில்லியன் டொலர்களை அன்பளிப்புச் செய்வதற்கான இருதரப்பு ஆவணங்கள் ஜனாதிபதிக்கும் இந்திய மத்திய நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஆனால் இந்திய அரசாங்கத்தின் சார்பில் தலைவர்கள் எவரேனும் இலங்கைக்கு வருகைதந்தால், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துவிட்டுச் செல்லும் வழக்கத்துக்கு மாறாக, இம்முறை நிர்மலா சீதாராமனுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழர் நலன்களில் இந்தியாவுக்கு அக்கறை இல்லை எனவும், தமது நாட்டின் தேசிய பாதுகாப்புசார் நலன்களை முன்னிறுத்தியே வட, கிழக்கு தமிழ் அரசியல் தலைமையை இந்தியா பயன்படுத்திக்கொள்கின்றது எனவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் போக்கு, சீனத்தூதுவரின் யாழ் விஜயம் மற்றும் இந்தியா – சீனா விவகாரத்தில் நடுநிலையாக செயற்படல் என்பன தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
சீனத்தூதுவரின் யாழ் விஜயம் குறித்து தாம் எந்தவொரு எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனவும், யாரேனும் யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவது குறித்து ஏன் எதிர்ப்பை வெளியிடவேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை சீனாவை சார்ந்து செயற்படுவதோ அல்லது ‘நீங்கள் எமக்கு ஆதரவாக செயற்படாவிடின், நாம் உங்களுடைய எதிரியுடன் சேர்ந்துவிடுவோம்’ என்று இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதோ தமக்குப் பொருத்தமானதல்ல எனவும், தாம் ஒருபோதும் அவ்வாறு நடந்துகொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ‘நாம் இந்தியாவின் மானசீக நண்பராக செயற்பட்டுவருகின்றோம்’ என்று சுட்டிக்காட்டிய சுமந்திரன், நாம் அவர்களது உண்மையான நண்பர்கள் என்பது இந்தியாவுக்கும் தெரியும் என்று குறிப்பிட்டார்.