மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு இடங்களில் வீடுகளின் ஜன்னல் கிறில்களை கழற்றி உள்ளே நுழைந்து, நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையிட்ட நபரை இன்று (5) காலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த மே 21ஆம் திகதி மட்டக்களப்பு – திருமலை வீதியிலுள்ள வீடு ஒன்றை பூட்டிவிட்டுச் சென்ற வீட்டு உரிமையாளர்கள், 23ஆம் திகதி மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் கிறில் கழற்றப்பட்டு, வீட்டிலிருந்த 25,000 ரூபாய் பணம், மணிக்கூடு, கவரிங் அலங்கார நகைகள் திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
குமாரபுரம், காளிகோயில் வீதியிலுள்ள மற்றுமொரு வீட்டை, அதன் உரிமையாளர் கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி மூடிவிட்டுச் சென்று, மீண்டும் 16ஆம் திகதி வந்து, வீட்டை திறந்து பார்த்தபோது, இரண்டு மோதிரங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி உபகரணங்கள் திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நடத்திய தேடுதல் விசாரணையின்போது வாழைச்சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, அவரது வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பல இடங்களில் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு, பல முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.