மட்டக்களப்பில் சுமார் 30 வீடுகளை உடைத்து கொள்ளையடித்து வந்த இளைஞர் கைது

87 0

மட்டக்களப்பு, வெலிகந்தை தொடக்கம் அக்கரைப்பற்று வரையான பிரதேசங்களில் சுமார் 30 வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களோடு தொடர்புடைய 28 வயதான இளைஞர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து நேற்று சனிக்கிழமை (04) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு, சந்தேக நபர் திருடிச் சென்ற மடிக்கணினி மற்றும் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூ‍லை மற்றும் மே மாதங்களில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் வீதியில் அமைந்துள்ள வீடுகளை பூட்டிவிட்டு, வீட்டு உரிமையாளர்கள் வெளியே சென்றுவிட்டு, இரண்டு மூன்று தினங்கள் கழித்து, தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மடிகணினி, தங்க மோதிரம், பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் போன்றவை திருட்டுப்போயிருந்த சம்பவங்கள் பல அடுத்தடுத்து இடம்பெற்றன.

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் இடம்பெற்றுவந்த விசாரணையின் அடிப்படையில், வாழைச்சேனை ஹாயிரா பள்ளி வீதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரை பொலிஸார் நேற்று அவரது வீட்டில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் வெலிகந்தை தொடக்கம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களில் உள்ள சுமார் 30க்கு மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் அவர் மீது முன்னரே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையினூடாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.