தீபாவளி தினங்களில் நுகர்வோருக்கு நல்ல பொருட்களை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாக கொண்டு நேற்று சனிக்கிழமை (04) பகல் ஹட்டன் நகரில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காலாவதியான மற்றும் மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
ஹோட்டல்களில் சமைப்பவர்கள், பேக்கரி திண்பண்டங்கள் தயாரிப்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளை தயாரிக்க வேண்டுமெனவும் உணவு தயாரிக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகள், உரிய ஆடை நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன.
இவ்வாறு வலியுறுத்தப்பட்டவர்கள் அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தரமான பொருட்கள் பண்டிகை காலங்களில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
தீபாவளி முடியும் வரை இந்த சோதனை நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.