இலங்கையின் பாதுகாப்பு மூலோபாய திட்ட முதல் அறிக்கையை 6 மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க ஆலோசனை

80 0

இலங்கையின் நிலப்பரப்பு மற்றும் கடல் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய திட்டத்தின் முதலாவது அறிக்கையினை 6 மாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க சம்மந்தப்பட்ட குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையின் எதிர்கால பாதுகாப்பு கரிசணைகளை கருத்தில் கொண்டும் மூலோபாய திட்டத்தை வகுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  அமைச்சரவையின் அனுமதியுடன் சிறப்பு குழு ஸ்தாபிக்கப்பட்டது.

ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல்  சன்ன குணதிலக்க தலைமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த குழுவில், ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் என 6 பேர் உள்ளடங்குகின்றனர்.

நாட்டின் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு பிரிவுகளை வலுப்படுத்தல் ஆகிய விடயஙகளை உள்ளடக்கி இந்த குழுவானது மூலோபாய திட்டத்தை வகுக்கவுள்ளது.

2030 ஆம் ஆண்டை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி ஜனாதிபதியின் இந்த திட்டம் தொடர்பில் 6 மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.