பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் மியான்வாலி என்ற இடத்தில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் நேற்று காலை 9 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 3 விமானங்கள் சேதம் அடைந்தன.
இதையடுத்து விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தேடுல் வேட்டை நடத்தி 9 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். தீவிரவாத தாக்குதலில் சேதம் அடைந்த 3 விமானங்களும், பயன்பாட்டில் இல்லாத பழைய விமானங்கள் எனவும், பயன்பாட்டில் உள்ள விமானப்படை விமானங்கள் எதுவும் சேதம் அடையவில்லை எனவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பொறுப்பு பிரதமர் அன்வருள் ஹக் காகர், ‘‘பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் முயற்சி முறியடிக்கப்படும்’’ என தெரிவித் தார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்பரஸ் புக்தி கூறுகையில், ‘‘பாகிஸ்தானை நிலைகுலையச் செய்ய நடைபெறும் சதிதான் இந்த தீவிரவாத தாக்குதல்’’ என்றார்.
பாகிஸ்தானில் இந்தாண்டின் முதல் 9 மாதங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் 386 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், வன்முறையின் மையமாக பலுசிஸ்தான் இருக்கிறது எனவும் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு படிப்புகள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.