பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்.11-ல் பொதுத் தேர்தல்

118 0

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தை கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கலைத்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி என்பதால், அதை உறுதிப்படுத்த வலியுறுத்தி பலரும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி காஜி ஃபயஸ் இசா, நீதிபதிகள் அதார் மினால்லா, நீதிபதி அமின் உத்தின் கான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஜீல் ஸ்வாதி, ‘தற்போது தொகுதி மறுவரையறை செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பணிகள் வரும் 30-ம் தேதி நிறைவடையும். இதையடுத்து, தொகுதிகளை உறுதிப்படுத்தும் பணி ஜனவரி 29-ம் தேதிக்குள் நிறைவடையும். இதனையடுத்து, பிப்ரவரி 11-ம் தேதி பொதுத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும்’ என தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து, ஷபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. எனினும், அது முதல் அந்நாட்டில் நிலைத்தன்மை இல்லாமல் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக, அந்நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மேல் சிகிச்சைக்காக லண்டன் சென்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப், தாயகம் திரும்பி இருக்கிறார். தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான் விரைவில் ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவாக இம்முறை, நாடாளுமன்றத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.