நெல்லை – பட்டியலினத்தவர் மீதான தாக்குதலை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

85 0

திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியிலினத்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் இருவர் மீதான வன்கொடுமை தாக்குதல்களைக் கண்டித்தும், பட்டியலின மக்கள் மீது தொடர் வன்கொலைகள், தொடர் தாக்குதல் நடைபெறுவதைக் கண்டித்தும், அதனை தடுக்க வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.மதுபால் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் க.ஸ்ரீராம் தொடங்கி வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சடையப்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் முத்துவளவன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலர் கலைக் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். வழக்கறிஞர் கு.பழனி நிறைவுரை ஆற்றினார்.