மலையக மக்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற நாம் 200 நிகழ்விலேயே பிரதமர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் பங்குபற்றியிருந்தது.
இந்நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டிருந்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,
நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை தேடித் தருவதற்காக மலையக மக்கள் 200 வருடங்களாக இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளப்படுத்தியுள்ளனனர் என்றும் சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்திற்கான அதிக பங்களிப்பை அவர்களே வழங்கியுள்ளனர்.
அவர்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில், இதனை செயற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.