17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

73 0

பல்கலைக்கழகங்களின் வளப்பற்றாக்குறை,விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி 17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் இன்று வியாழக்கிழமை (02) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரச பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

விரிவுரையாளர்களர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பரண ஜயவர்தன குறிப்பிடுகையில்,

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.புதிய வரி கொள்கையினால் நிறைவடைந்த 10 மாத காலத்துக்குள் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் உள்ளவர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதால் பல்கலைக்கழக கல்வி கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் கட்டம் கட்டமாக வரையறுக்கப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டுக்கு பல்கலைகழகங்களுக்கு அதிகளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.வளப்பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதிகளவில் மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கினால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எடுத்துரைத்தோம். ஆனால் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே, பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையாக இல்லாதொழிக்க கூடாது என்பதற்காகவே விரிவுரையாளர்கள் நிலையான தீர்வு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு கிடைக்காவின் எதிர்வரும் நாட்களில் கடுமையான தீர்மானங்களை எடுப்போம் என்றார்.