தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழக அரசு உத்தரவு

112 0

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலிமாசுவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் காலை ஒரு மணிநேரம், மாலை ஒரு மணிநேரம் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முந்தைய நாளும், தீபாவளியன்றும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், வாகன பெருக்கம், தொழிற்சாலை அதிகரிப்பு போன்ற காரணங்களால், காற்றில் உள்ள மாசு அளவு அதிகரித்து, பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உட்பட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் உள்ள ரசாயனங்கள் காற்றில் கலப்பதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதுதவிர, பட்டாசு புகை மூட்டமும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால், பட்டாசு வெடிக்க தடை விதிக்குமாறு பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

அதே நேரம், பட்டாசு தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் நலனும் கருத்தில் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன், பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. அதன்படி, காலை6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அத்துடன், கடந்த ஆண்டு முதல் 1000 வாலா, 10 ஆயிரம் வாலா என சரவெடிகளை வெடிப்பது மற்றும் அதிக சப்தமுள்ள வெடிகளை வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அனைவரும் பின்பற்றுமாறு சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.