வவுனியாவில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல்

74 0

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுவனியாவில் இடம்பெற்றது.

‘ஒரே கிராமம் ஒரே நாடு’ என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல் புதன்கிழமை (01) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள், வடமாகாண சபை செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வவுனியா மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விவசாயத் திட்டங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

வடமாகாண பாடசாலைகளின் உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத மாணவர்களின் முழுமையான அறிக்கையை தமக்கு வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன இங்கு தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முடிந்தவரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த பிரதமர் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் வவுனியா நகரசபைக்குச் சென்று புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இலகுவாக இணையவழி வரி செலுத்தும் பணியினை ஆரம்பித்து வைத்தார்.