அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 19 ஆவது அதிபராக எஸ்.ராஜன் பணியைப் பொறுப்பேற்றார்

111 0

அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் புதிய அதிபராக நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய சித்திரன் ராஜன் புதன்கிழமை (01) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புசல்லாவையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் பொகவந்தலாவை கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் சென் மேரிஸ் கல்லூரி மற்றும் ஹொலி ரோசரி ஆகிய கல்லூரிகளில்  இடை நிலை மற்றும் உயர்தர கல்வியைத்தொடர்ந்தார்.

கொழும்பு பல்கலைக்கழக வணிகமாணி பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விமுதுமாணி பட்டத்தையும் பேராதனை பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர்.

கொத்மலை எல்பட தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக தனது பணியை  ஆரம்பித்த இவர் மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியிலும் பணியாற்றி பின்னர்  ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பிரதி அதிபராக ஏழு வருடங்கள் கடமையாற்றினார்.

இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐ கொண்ட எஸ்.ராஜன் 130 வருட வரலாறு கொண்ட அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 19 ஆவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.