சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காகவே பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து முக்கிய தீர்மானம் எடுப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லை பகுதியில் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்சார கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மின்கட்டணம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
உலக சந்தையின் விலைக்கு அமைய தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்குமாறு எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களில் வலியுறுத்தின.
எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் போது அதற்கு எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளார். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளோம்.
வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்ததன் பின்னரே பாதீட்டுக்கு ஆதரவு வழங்குவதா,இல்லையா என்பதை தீர்மானிப்போம்.
சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்காகவே பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும்; காலங்களில் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்.இதனால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.ஆகவே நாட்டு மக்களின் நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள்.கூட்டணியாக ஒன்றிணைவோம் என்றார்.