கண்டியில் மல்வத்தை மகாநாயக்கரை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்

111 0

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று புதன்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர் மகாநாயக்கருடனான தனது சந்திப்பின் போது இலங்கை மக்களுடனான இந்திய நட்புறவை  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாளை வியாழக்கிழமை (2) இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான  ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாயில் 82.40 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாற்றப்படும் என இந்தியாவின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான கலாசார உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரியத்தையும் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அங்கீகரித்தார்.

மேலும் இந்தியா வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு  நன்றி தெரிவித்த அவர் இலங்கையின்  பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவுவதற்கு முதலில்  கைகோர்த்த நாடு இந்தியாவே ஆகும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்திய நிதியமைச்சர் கண்டியில் சியாம் பிரிவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதனையையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் இந்திய நிதியமைச்சர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து விவாதித்தார்.

இந்தியாவின் நிதியமைச்சர் இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களின் சூரிய மின்மயமாக்கல் திட்டம் தொடர்பாகவும் கூறினார்.

மேலும் மகாநாயக்க தேரர்கள் இந்தியாவுக்கு உதவிய விடயங்களுக்காக நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.