பாராளுமன்ற உத்தரவுப் பத்திரத்தில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்ற மசோதாவை அரசாங்கம் சேர்த்துள்ளது. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, ஒன்றுகூடல் மற்றும் சங்கம் அமைத்தல் ஆகிய சுதந்திரங்களை இந்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் குறைக்கிறது என்பதுடன் மீறுகிறது என்று சட்டத்தரணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பது பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பினை முற்றாக இல்லாதொழிக்கும் ஒரு விடயமாகவே இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். இணையவெளியில் அரங்கேறிவரும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பவற்றை முகாமைத்துவம் செய்வதில் பாரிய சிக்கல்களை இந்த புதிய சட்டம் தோற்றுவிக்கும் என்று நம்பப்படுகின்றது.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை உருவாக்குகின்றது. மேற்படி நியமிக்கப்படும் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் மூன்று வருட பதவிக் காலத்துடன் ஐந்து உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள்.
இதில் ஆள்மாராட்டம் மற்றும் தவறான விடயங்களை ஒருவர் பதிவிடும் பட்சத்தில் அதனை பொலிஸ் அல்லது குற்றப் புலானாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றமாக குறித்த நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவே விசாரிக்கும் என்று நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கூறுகின்றது.
நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது, ஒருசில தொடர்பாடல்களை தடை செய்வது, தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் பற்றி இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கையில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகங்களை ஏற்படுத்துவதற்காக பொய்யான தகவல்கள் மூலம் அநாவசியமான முறையில் மக்களை தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் போலியான செய்திகளை பகிர்தல், ஆள் மாறாட்டம் மூலம் மோசடி, கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையை மறுத்தல் போன்ற விடயங்கள் இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவிக்கிறார். நிகழ்நிலை வழங்குனர்கள்இ தடயவியல் வல்லுனர்கள் மற்றும் ஆநுவுயு நிறுவனத்துடன் நேரடித் தொடர்பு என சகலவிதமான வளங்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இருக்கின்றன. அப்படியிருந்தும் தற்போது இணையத்தில் நடைபெறும் வன்முறைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சவாலான ஒன்றாகவே இருக்கிறது. அப்படியிருக்கும் போது ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் வெறுமனே ஐந்து பேர் கொண்ட குழுவினால் இந்தப் பணியினை எவ்வாறு செய்துவிட முடியும் என்று சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் கேள்வியெழுப்புகின்றார்.
‘இந்த நிகழ்நிலைச் சட்டம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்ற சட்டம் என்று சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அது உண்மைக்கு புறம்பானது என்பதுடன் ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் நிகழ்நிலை வணிகத்தில் ஈடுபடுகின்றவர்களின் பேச்சுச் சுதந்திரத்தை முடக்கி அவர்களுடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட முயற்சிக்கப்படுகின்றது’ என சுவஸ்திகா தெரிவித்தார்.
இது ஒரு அறிக்கையை தவறான அறிக்கை என்று தீர்மானிக்க மற்றும் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மிதம்மிஞ்சிய அதிகாரங்களை ஜனாதிபாதியால் நியமிக்கப்படும் நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு இந்த சட்டம் வழங்குகின்றது.
அதன்படி உள்ளடக்கம், தளங்கள் மற்றும் இடங்களை அகற்ற அல்லது தடுக்க இணையவெளி சேவை வழங்குநர்களுக்கு உத்தரவுகளை வழங்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அந்த உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனைத் தடைகள் விதிக்கப்படலாம்.
இந்தப் பொருளாதார நெருக்கடியில் மக்கள் படும் பாரிய கஷ்டங்களைப் பற்றி அலட்சியம் காட்டுவது எதிர்க்கப்படும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது என்பதற்கு முன்மொழியப்பட்ட சட்டங்கள் தெளிவான அறிகுறி என 30 இற்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடிக்கு இந்த நாட்டின் குடிமக்கள் பொறுப்பல்ல. நெருக்கடிக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அரசாங்கம் மக்களின் சுதந்திரத்தை முடக்கும் நிர்வாகத்தை ஊக்குவிக்கும் சட்டங்களை உருவாக்க அரச அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது.
அரசாங்கம் செய்ய வேண்டியது கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அறிவொளியான சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபடுவதுதான். அந்த நிகழ்ச்சி நிரல் அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும் உட்பொதிக்கப்பட்ட ஊழலுக்கு பதிலளிக்க வேண்டும் என குறித்த கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் இணையவெளி வன்முறையின் பொதுவான வடிவமாக இணையத்தில் நெருக்கமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவது அல்லது ஆபாசமாக அறியப்பட்டதுஸ அத்துடன் மீம்ஸ் மற்றும் எடிட் செய்யப்பட்ட படங்கள் வழியாக பழிவாங்குவது என்பன இருக்கின்றன.
இருப்பினும் அதைவிட பிற வெளிப்பாடுகளும் இருக்கின்றன. வெளிப்படையாகப் பேசும் பெண்கள மற்றும் சமூக ஆர்வலர்கள் என்போர் முதற்கட்டமாக இணையவெளியில்தான் குறிவைக்கப்படுகின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டம் இவற்றை தடுப்பதற்கான நிபந்தனைகளை கொண்டிருக்கின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பலவீனத்தை எதிர்நோக்கும் நிலையில்தான் இருக்கின்றது.
இந்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு வந்தால் இனம் மதம் ஆகிய விடயங்களை மையமாக வைத்து வன்முறைகள் நடக்கும்போது தேவையற்ற கைதுகள் நடைபெறும் என்பதுடன் அரசாங்க உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பாக நடந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன என தனது பெயரை வெளியிட விரும்பாத மனித உரிமைகள் ஆர்வலர் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்கனவே அமுலில் இருங்கின்ற பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது பிரயோகிக்கப்பட்ட விதம் அதற்கு முக்கியதொரு உதாரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலைக்குப் பின்னர் ஏற்பட்ட அதிகமானவர்கள் நிகழ்நிலை வணிகத்தில் ஈடுபடுகின்றார். அதிலும் அதிகமான பெண்கள் சுய கைத்தொழில்கள் மற்றும் இணையவெளியூடாக பல்வேறு சிறு வணிகங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அமுலுக்கு வந்தால் ஏராளாமான நிகழ்நிலை வணிகங்கள் பாதிக்கப்படலாம்.
சிறு வணிகங்கள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வருமானம் ஈட்டும் ஒரு நற்செயலை மாத்திரம் செய்துவிடவில்லை. பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இலங்கையின் டொலர் நெருக்கடியினை குறைப்பதற்கான அத்திபாரத்தினையும் உருவாக்கியுள்ளது. இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றபோது நாடு என்ற அடிப்படையில் இலங்கை அடைய வேண்டிய இலக்குகளை அடைய முடியாமல் போவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன.
2007 ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு (ஐ.சி.சி.பி.ஆர்), 1883 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தண்டனைச் சட்டம், 1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம், 1995 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை டெலிகொமினிகேசன் சட்டம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டம், 2007 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க, கணனிவழிக் குற்றச்சட்டம், 1927 ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க, ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டம் என சமூக ஊடகங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு சட்டங்கள் அமுலில் இருக்கின்றன.
மேற்குறித்த சட்டங்கள் ஊடாக சமூக ஊடகத்தில் இடம்பெறும் வன்முறை உள்ளிட்ட ஏனைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான வளங்கள் இருக்கின்றன. அப்படியிருக்கின்ற போதிலும் நியாயமற்ற காரணங்களுக்காக எழுத்தாளர்கள் பெண்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் என்போர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் மனித வளம் குற்றங்களை இனங்காணல் மற்றும் தடவியல் நிபுணத்துவம் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி தெளிவான குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதால் இலங்கை என்ற நாட்டுக்கு இந்தச் சட்டம் மிகவும் பாதுகாப்பற்ற சட்டமாகவே பார்க்கப்படுகின்றது.
நுpகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது முழுக்க முழுக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் விசேட குழுவான நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவுடன் மாத்திரமே தங்கியிருக்கிறது. இந்தக் குழுவில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களுக்கான தகைமைகள் பற்றி தெளிவான எந்த நிபந்தனையும் கொடுக்கப்படவில்லை. இந்த நியமனத்தில் பாலின அடிப்படையிலான ஒதுக்கீடு என்பது பற்றியும் எந்தவித நிபந்தனையும் இல்லை என்பதன் அடிப்படையில் இந்தச்சட்டம் ஒரு பொது நலச்சட்டம் இல்லை என்ற முடிவுக்கு எம்மால் வர முடிகின்றது.
இலங்கையில் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கு என பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட பல்வேறு சட்டங்கள் அமுலில் இருக்கின்றன. அரசாங்கம் என்பது தனிநபர்களின் விருப்பத்திற்கு இயங்க வேண்டிய ஒரு தளம் அல்ல. மேலும் நாட்டில் சட்டங்கள் என்பது மக்களை பாதுகாப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர சிறையில் தள்ளி செல்வங்களை சூரையாடுவதற்காக இருக்கக் கூடாது. நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பது கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் கலைத்திறன் என்பவற்றை முடக்குகின்றது. எனவே இந்த சட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம்.
அஹ்ஸன் அப்தர்