மட்டக்களப்பு சித்தாண்டியில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலையை மூடுமாறு கோரியும், இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், நேற்றுக் காலை சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சித்தாண்டி பொது மக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கமுடியாது மூடப்பட்டுள்ள நிலையில், மதுபான உற்பத்தி தொழிற்சாலை திறப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்று இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல் மத்தியில் தமது கடமைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இன்றும் அதே அச்சுறுத்தல்கள் இடம்பெற்றுவருவதை அனுமதிக்க முடியாது எனவும் இதன்போது பொதுமக்கள் தெரிவித்தனர்.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த வித தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படாத நிலையில், மதுபான உற்பத்தி சாலைகளுக்கு மட்டும் அனுமதியளிப்பதன் நோக்கம் என்ன? என்றும் இதன்போது மக்கள் கேள்வியெழுப்பினர்.