பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ள சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள்

129 0

சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (01.11.2023) காலை 7.00மணி தொடக்கம் நண்பகல் 12.00மணி வரையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று(31.10.2023) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவை தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன்போது கலந்துகொண்ட பிரதிநிதிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றி புதிதாக சொல்லத் தேவையில்லை. நம் அனைவருக்கும் வாழ்வது கடினமாக உள்ளது.2016க்கு பிறகு எங்களின் சம்பளம் ஒரு ரூபாய் கூட கூடவில்லை. தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம்,போக்குவரத்துச் செலவு, பொருட்களின் விலை, பாடசாலை பொருட்களின் விலை இவையெல்லாம் உயர்ந்துள்ளன.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அடுத்த மாதம் கொண்டு வரப்படும். அப்போது அனைத்து ஊழியர்களின் சம்பளம் ‘ரூ. 20,000 ஆகஅதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் அடிப்படைக் கோரிக்கை.

மேலும் நாங்கள் போராடுகிறோம் என்பது அரசுக்கு தெரியும். எனவே,போராட்டத்தை ஒடுக்க அரசு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சமூக ஊடக தணிக்கைச் சட்டம் போன்ற சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் எங்கள் வாயை அடைக்க முயற்சிக்கிறது. எனவே, நாங்கள் அவற்றையும் தோற்கடிக்க வேண்டும். அது மட்டுமல்ல மத்தியமாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட மாகாண சபை வைத்தியசாலைகளில் நூறு மணித்தியாலங்களுக்கு மேல் மேலதிக நேர வேலைசெய்தாலும் மிக குறைந்த அளவிலேயே கொடுப்பணவு வழங்கப்படுகிறது.

விடுமுறை நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பணவு நிறுத்தப்பட்டுள்ளது. சில மாகாணங்களில் விடுமுறை நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பணவு குறைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை வைத்தியசாலைகளில் பிரச்சினைகள் அதிகம். மறுபுறம், இடமாற்ற சிக்கல்கள் எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரும் அதை தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துகிறார்கள், அதை முறையாக முறைமைப்படுத்தவில்லை. எனவே, இம்முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வாக்குறுதியளிக்கப்பட்ட வாரம் 05 நாட்கள். சீருடை சலுகை இவை இன்னும் வாக்குறுதிகள் மட்டுமே. மறுபுறம், மருந்துகள் பற்றாக்குறையால், நோயாளிகளைப்போலவே நாங்களும் ஆதரவற்றவர்களாக இருக்கிறோம்.

எனவே இவற்றைத் தீர்க்க முயற்சிப்போம். இதற்கு தீர்வு காணும் வகையில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். தீர்வு இல்லையெனின் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.