கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பற்களின் அடிப்படையில் வயது நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.
“தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூறாய்வு நிலையத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நாங்கள் அவற்றின் பற்களை எக்ஸ்ரே எடுத்து அவர்களின் வயதை அனுமானிக்க உத்தேசித்துள்ளோம்.
மேலும் இந்த பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பல் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளோம். இனிவரும் காலங்களில் எக்ஸ்ரே எடுத்து முடிந்த பின்னர் அவர்கள் வந்து நேரடியாக இந்த எலும்புக்கூட்டுத் தொகுதியை பரிசோதிக்கும்போது நாங்களும் கூடவே இருந்து எங்களுடன் தொடர்புடைய விடயங்களை கையாள்வோம்.”
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நவம்பர் 20ஆம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்க ஒக்டோபர் 30ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்கால அகழ்வு பணிகளுக்காக சுமார் 25 இலட்சம் ரூபாய் நிதி எஞ்சியுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது? என, முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, அனைத்து எலும்புக்கூடுகளையும் அகழ்ந்து எடுத்ததன் பின்னர் அதுத் தொடர்பில் ஆராய்ந்து, இதுத் தொடர்பிலான தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டார்.
“இதுத் தொடர்பிலான முடிவுகளை பொறுத்தவரையில் இவ்வாறான சிறு சிறு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மீட்கப்பட்ட எலும்புபக்கூடுகளின் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுவிட்டன. நாங்கள் கிடங்கில் உள்ள எலும்புக்கூடுகளை முழுமையாக எடுப்போம், அதன் பின்னர் ஆராய்ந்து முடிவுகளை சொல்வதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்தில் சொன்னால் சில சிக்கல் எழலாம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அவர்களின் சட்டத்தரணிகள் கிடங்கில் உள்ள அனைத்து எலும்புக்கூடுகளையும் எடுப்போம் எடுத்த பின்னர் எஞ்சிய பணிகளை மேற்கொள்வோம் என கூறியிருக்கின்றார்கள்.”
செப்டெம்பர் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவடைந்ததோடு, கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக புதைகுழியை அகழ்ந்தெடுக்கும் விசாரணையில் முன்னோடியாக செயற்படும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார்.
“கிடைத்த ஆதாரங்களை முறையாக ஆய்வு செய்வதற்காக இந்த 2 மாத காலத்திற்கு இது நிறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஏனைய பொருட்களை ஆராய்ந்து உண்மைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், இந்த அகழ்வு மற்றும் விசாரணையை தொடரலாமா வேண்டாமா என நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை வரை காத்திருக்கிறோம். என்ன தீர்மானம் எடுக்கப்படும் என்பதுதான் விடயம்.”
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் புதைகுழியை அகழ்ந்தெடுக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்களின் பின்னர் 17 எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாயை பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் இந்த வருடம் ஜூன் 29ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.