விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார்.
இந்த நாட்டிற்கு தேவையான 40% பால் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் என்ற வகையில், உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்க தேவையான பங்களிப்பை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்பட்டது.
விவசாய அமைச்சரினதும் விவசாயிகளினதும் ஒத்துழைப்போடு அரிசியில் தன்னிறைவை எட்டி மேலதிக அரிசி உற்பத்தியைப் பேண முடிந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கால்நடை அமைச்சும் மக்களுக்கு தேவையான அளவு புரதத்தை வழங்கக்கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில், 40 வீதமான திரவ பால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையைக் கருத்தில் கொண்டு திரவப் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
மேலும், மேய்ச்சல் தரைகளை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான உணவை தட்டுப்பாடின்றி வழங்குவதன் மூலம் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தேசிய பால் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பால்மாவில் தங்கியிருக்கும் நிலையை மாற்றி அதற்குப் பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் திரவ பாலை ஊக்குவிக்க வேண்டும்.
திரவப் பாலை மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், நடமாடும் விற்பனை நிலையங்களைப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திரவ பாலை பொதி செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கால்நடை தீவனம் இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மூடப்பட்ட கால்நடை உற்பத்தியை மீண்டும் தொடங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” எனவும் இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் தெரிவித்தார்.