வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை குறைந்துள்ளது

104 0

முன்னேற்றம் காணப்படாத வரவுசெலவுத் திட்ட  முன்மொழிவுகளின் எண்ணிக்கை பொருளாதார நெருக்கடிக்கு முன் 45 வீதமாக இருந்ததுடன் நெருக்கடிக்குப் பின்  அது 70 வீதமாக உயர்ந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரவு செலவுத் திட்ட உரைகளில் கூறப்பட்ட முன்மொழிவுகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மையற்ற நிலை பொருளாதார நெருக்கடியின் போது கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தற்போதைய நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை இழப்பதற்கும் நிதி வெளிப்படை தன்மையற்ற நிலை ஒரு முக்கிய காரணியாகும் எனவும் அந்த ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் எனும் தொனிப்பொருளில்  வெரிட்டே ரிசர்ச் மேற்கொண்ட ஆய்விலேயே  இந்த விடயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இது தொடர்பிலான தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றதுடன் அந்த ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2017-2021 க்கு இடையில் முன்னேற்றம் காணப்படாத முன்மொழிவுகளின் என்னிக்கை 45 வீதமாக இருந்ததுடன் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அதன் செலவின முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான 70 வீதமான தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை. அதாவது தகவல் இணையவழியூடாக முன்கூட்டியே வெளியிடப்படவில்லை என்பதுடன்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படவும் இல்லை.

2017 ஆம் ஆண்டு  முதல் நிதி அமைச்சர்களால் முன்மொழியப்பட்ட வரவுசெலவுத் திட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை அவதானிக்கும் போது  தகவல்களை வெளியிடத் தவறுவது ஒவ்வொரு ஆண்டும் காணப்படும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இருப்பினும்  2022மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இவ்வெளிப்படையற்றத் தன்மையின் அளவு கணிசமாக  அதிகரித்துள்ளது.

இதேவேளை வெரிட்டே ரிசர்ச்சின் இந்த வருடத்தில் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதி வரையில்  வரவு செலவுத்திட்ட உரையில் 25 முன்மொழிவுகளில் 68 வீதமானவை தொடர்பான எந்த தகவல்களும்  இல்லாததால் மதிப்பிட முடியாதுள்ளது என்பதை காட்டுகிறது.

முன்மொழிவுகளில் 32 வீதமானவை முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தகவல் அனுகக்கூடியதாக இருந்தாலும் அவற்றில் 8  வீதமானவையே முறையாக ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 24 வீதமானவை தொடர்பான மிகவும் மோசமான தகவல்களே வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 25 முன்மொழிவுகளில் மொத்த பெறுமதி 49.3 பில்லியன் ரூபா எனவும் இருப்பினும் முன்னேற்றம் காணப்படாத திட்டங்களின்  பெறுமதி 47.7 பில்லியன் ரூபா எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தற்போதைய நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை இழப்பதற்கும் நிதி வெளிப்படைத்தன்மையற்ற நிலை ஒரு முக்கிய காரணியாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் அரசாங்கம் வழங்கிய பல வாக்குறுதிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அதன் சமீபத்திய ஆளுகை பகுப்பாய்வில் வழங்கிய பல பரிந்துரைகள் நிதி வெளிப்படைத்தமையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட உரை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்து அதிக வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக்கூறலும் சர்வதேச நாணய நிதியத்தினால் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிவர்த்தி செய்வதற்கும் நிலையான பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.