உத்தேச வரவு – செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், தனியார் துறையையும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறெனில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் பெருந்தோட்ட மக்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கு செல்ல வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்ட மக்கள் இன்றும் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் பெருந்தோட்டங்களை குத்தகைக்கு வழங்கியுள்ளதைப் போன்று, கம்பனிகள் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு தேயிலைக் காணிகளை வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால் தொழிலாளர்கள் தமது காணிகளை தாமே பராமறித்துக் கொள்வதோடு, போதுமான வருமானத்தையும் பெற்றுக் கொள்வர். இது தொடர்பில் சகல தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டும்.
அதனை விடுத்து மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்கு செல்வதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. தற்போது அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும், தனியார் துறையையும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அவ்வாறெனில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்திலும் அரசாங்கம் தலையிட வேண்டும்.
அரசாங்கத்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. ஆனால் சம்பளத்தை அதிகரிக்குமாறு கம்பனிகளிடம் வலியுறுத்த வேண்டும். நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரிய பங்கினை வகிக்கும் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.