அகரத்தின் கைபிடித்து – தமிழ் சிகரத்தில் ஏறும் நாள்! ஏட்டினைத் தொடங்கி – தமிழ் அமுதத்தைப் பருகும் நாள்.

199 0

நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. அதே போல் பேர்லின் தமிழாலத்தின் காரியாலயத்திலும் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி செந்தில்குமரன் அவர்களின் தலைமையில் அரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் அரிசியில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுத்தார் எமது மூத்த ஆசிரியை திருமதி மங்களநாயகி மனோகரன் அவர்கள்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது தமிழ் சமூகத்தில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் அரிசியில் குழந்தையை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். இந்த கல்வி கற்பதன் மூலம் ஒருவர், பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேட தொடங்குகின்றார்.

இந்த குழத்தைகள் அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ, வளர வாழ்த்தி நிற்கிறது பேர்லின் தமிழாலயம்.