அம்பிட்டிய தேரர் விவகாரம்! தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சிங்கள சட்டத்தரணிக்கு உயிர் அச்சுறுத்தல்

170 0

மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தில் தாம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக தனுக்க ரணன்ஞக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள சட்டத்தரணி மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நான் முறைப்பாடு செய்தமை தொடர்பில் பலர் என்னை பாராட்டியிருந்தார்கள்.

எனினும், சிலர் எனது இந்த நடவடிக்கையை எதிர்க்கிறாரர்கள். இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை.

30 வருட யுத்தத்தை கடந்து வந்த இலங்கையர்களாக நாம் இதுவரை ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

சமூகத்தில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஒருவர் கருத்து வெளியிட்டால், அவர் கைது செய்யப்படுகிறார்.

அப்படியானால், இவ்வாறான கருத்து வெளியிடும் தேரரை ஏன் கைது செய்ய முடியாது? ஏன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது? பொறுப்புள்ள ஒரு பிரஜையாக இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கும் தேரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்.

அத்துடன், அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக நான் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் பொலிஸ்  தலைமையகத்தில் நான் மேற்கொண்ட முறைப்பாட்டில் வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.