முல்லைத்தீவில் போக்குவரத்துக்கு இடையூறாக மழை நீர் தேங்கி நிற்பதால் மக்களாகிய தாம் அசௌகரியங்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு நகரத்தில் அமைந்துள்ள வட்டப்பாதையில் நான்கு பாதைகள் வந்து இணைகின்றன. எல்லா திருப்பங்களிலும் நீர் தேங்கி நிற்பதனை அவதானிக்க முடிந்தது.
மழை பொழியும் வேளை தேங்கும் நீரின் அளவு அதிகரித்தும் பின்னர் அதனளவு குறைந்தும் இருப்பதை அவதானிக்கலாம் என நகரக் கடையொன்றில் பணியாற்றும் பணியாளரொருவர் தன் கருத்தினை பதிவிட்டார்.
வட்டப்பாதையில் இருந்து கடற்கரை நோக்கிய வீதியில் அதிகளவு நீர் தேங்கி நிற்கிறது. இது திருப்பங்களில் பயணிப்போருக்கு இடையூறாக இருக்கின்றது என மக்களால் விசனப்பட்டுக் கருத்திடப்பட்டமையும் நோக்கத்தக்கது.
வீதியில் அதன் ஓரங்களில் தேங்கும் நீர் வழிந்தோடும் படியான சூழல் இல்லாததால் நீரால் பாய்ந்தோட முடியவில்லை. இது தேங்கி நிற்கின்றது.
பயணிப்பதற்கு இடையூறாக இருக்கின்றது எனவும் அந்தப் பாதையை தான் நித்தம் பயன்படுத்துவதாகவும் கூறிய வியாபாரி ஒருவர் திருப்பங்களை பயன்படுத்தும் போது தன் மோட்டார் சைக்கிள் தேங்கிய நீருக்குள் செல்வதாகவும் இது தமக்கு இடையூறாக அமைவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்
இந்த வட்டப்பாதை முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், பிரதேசசபை அலுவலகம், மின்சார பராமரிப்பு நிலையம் என்பவற்றையும் சூழ கொண்டமைந்த இந்த வட்டப்பாதையோடு நான்கு பிரதான பாதைகள் இணைந்து கொள்கின்றன.
கடற்கரை வீதி, பொலிஸ் நிலைய வீதி, செல்வபுரம் ஊடாக புதுக்குடியிருப்பு வீதி, மாங்குளம் வீதி என நான்கு வீதிகளும் இணைந்து அமைகின்றன. அதிக மக்கள் போக்குவரத்தினை கொண்ட இந்த அமைப்பு பாதையில் மழை நேரங்களில் தேங்கும் நீரை வடிந்தோடச் செய்வதற்கு யாரும் அக்கறை காட்டவில்லை என்று கருத்துக்களை பகிர்ந்திருந்தார். முல்லைத்தீவு நகர வாசியொருவர்.
மாவட்டத்தின் தலைநகரம் என்ற பெயரோடு விளங்கும் முல்லைத்தீவு பட்டினம் கொண்டுள்ள வட்டப்பாதைகளில் இது முதன்மையானது. மாரி மழைக்காலம் தொடங்கி விட்டது.
இதனால் தொடர்ந்து நீர் தேங்கி நிற்க வாய்ப்பு ஏற்படும். உரிய தரப்பினர் விரைந்து இதனை சீர் செய்து பொதுமக்களுக்கு உதவ முன் வரவேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.