அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவ பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்ட குழுவினர் கூறுகின்றனர்.
கொரோனா பரவல் காலத்தில் அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.